விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, March 30, 2012

கோடையில் வாடாமல் தப்பிக்க


வறுத்தெடுக்கும் வெயிலில் பல்வேறு சிக்கல்கள் நம்மை தொற்றிக் கொள்கின்றன. உடல் வெப்பமடைவது, சரியான தூக்கமில்லாமல் போவது, கவனக் குறைவு, தோல் நோய்கள், எரிச்சல், படபடப்பு, உடலில் தண்ணீர் பற்றாக்குறை என பட்டியல் நீளும்.

இந்த கோடை காலத்தில் உடலை சமநிலைக்கு வைத்திருப்பதில் நமதுஉணவுப் பழக்க வழக்கங்கள் முதல் இடத்தைப் பிடிக்கின்றன.

கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் காத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறும் தண்ணீர் இந்த பணியைச் செய்து விட முடியாது. அதற்கு உதவியாக முதலில் வருவது காய்கறிகள்.

காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது மிகவும் சிறந்தது. அதிகமாய் வேகவைத்தோ, பொரித்தோ உண்பதில் எந்த விதமான பயன்களும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

பழங்கள் உண்பது கோடைக்காலத்துக்கு மிகவும் அவசியமானது. நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதுடன், உடலின் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகிறது.

காய்கறிகளும், பழங்களும் அதிகம் உண்பது உடலின் தண்ணீர் தேவையையும், குளிர் தேவையையும் நிறைவேற்றுவதுடன், அவற்றிலிருக்கும் வைட்டமின்கள், மினரல், விஷ எதிர்ப்பு தன்மை, நார்ச்சத்து இவையெல்லாம் கோடையில் நோய் வராமலும் நம்மைக் காத்துக் கொள்கின்றன.

வெங்காயம் நிறைய சாப்பிடுங்கள். வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் வெப்ப அரிப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்க வெங்காயத்திலுள்ள குவர்சடின் எனும் வேதியல் பொருள் உதவும்.

தர்பூசணி சாப்பிடுங்கள். தர்பூசணியில் 90 விழுக்காடு தண்ணீரே இருப்பதால், உடலின் தண்ணீர் தேவைக்கு சிறந்தது தர்பூசணி. தர்பூசணியை விட அதிக தண்ணீர் சத்துள்ள ஒரு காய்கறி உண்டு அது என்ன தெரியுமா ? வெள்ளரிக்காய் ! வெள்ளரிக்காயை அதிகமாய் உட்கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

உடலின் வெப்பம் வெளியேற வேண்டியதும், உடல் குளிர வேண்டியதும் கோடை காலத்தின் தேவைகளில் ஒன்று. அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்ணும் கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுப் பொருட்கள் உதவும். குறிப்பாக வேக வைத்த உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்டா ரொட்டி, அரிசி இவை.

அப்படியே வாழைப்பழம் சாப்பிடுவது கூட கோடைகாலத்தில் உடலை நலமுடன் வைத்திருக்கும்.

காய்கறிகளினால் சூப் தயாரித்து அதைக் குளிர வைத்து உண்பது கோடைக்குச் சிறந்தது.

கூடவே காய்கறி சாலட் இருந்தால் மிகவும் நல்லது !

சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும்.

மிக முக்கியமாய் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் பாட்டில் குளிர்சாதனங்கள், மற்றும் தற்போது புற்றீசலாய் கிளம்பியிருக்கும் “எனர்ஜி டிரிங்” சமாச்சாரங்கள்.

குளிர்சாதனப் பொருட்கள், பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள், இவையெல்லாம் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. உங்கள் பணத்தையும் உடல்நலனையும் அழிப்பதற்காக வண்ண வண்ண பாட்டில்களில் கண்ணைக் கவரும் விளம்பரங்களோடு வரும் பானங்களை தவிருங்கள். தண்ணீர் நிறைய அருந்துதலே சிறப்பானது.

கோடையில் தண்ணீர் மூலமாக நோய்கள் விரைவில் பரவும் என்பதால் எப்போதும் கையுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்வதே பாதுகாப்பானது.

நன்றாகப் பொரித்த உணவு வகைகளை ஒதுக்குங்கள். சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், சிக்கன் ஃபிரை வகையறாக்களை முழுவதுமாய் ஒதுக்குங்கள். மூன்று வேளை மூக்கு முட்ட உண்பதை விட நான்கைந்து தடவைகளாக கொஞ்சம் கொஞ்சமாய் உண்பதே கோடையில் சிறப்பானது.

‘ஐஸ் காபி’, ‘ஐஸ் டீ’ போன்ற பானங்கள் கோடை காலத்துக்கு உகந்ததல்ல. அவை எந்தக் காலத்துக்கும் உகந்ததல்ல என்பது வேறு விஷயம். எனவே அவற்றை விட்டு தள்ளியே நிற்பதே நல்லது.

இருக்கவே இருக்கிறதே இளநீர், மோர், எலுமிச்சை பழச் சாறு போன்றவை !
உணவுப் பழக்கத்தில் ஒழுங்கைக் கடைபிடித்தாலே கோடையில் வாடாமல் தப்பிக்கலாம்.






----

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்